புதுப்பேட்டை அருகே உள்ள ஆற்றில் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் ஊராட்சி நிர்வாகம்.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை... June 08, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் *புதுப்பேட்டை அருகே உள்ள ஆற்றில் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் ஊராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுக்க இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.* திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள செட்டேரிடேமில் புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூர் பெரிய ஏரிக்கு கொட்டாறு ஆறு செல்கிறது. குறிப்பாக புதுப்பேட்டை வழியாக காசி வட்டம் செல்லும் ஆற்றுப்படுகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பை மற்றும் புதுப்பேட்டை பகுதியில் இயங்கும் அரசு மருத்துவமனையின் கழிவுகள், ஆகியவற்றை இந்த ஆற்றில் கொட்டி ஊராட்சி நிர்வாகம் மாசடையச் செய்து நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆற்றில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மையான நீர் ஓடிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக இந்த ஆற்றுப்படுகையில் கழிவுநீர், பிளாஸ்டிக் குப்பைகள் கழிவு பொருட்கள் கொட்டி ஆறே இல்லாத சுவடுகளாக தற்பொழுது காட்சியளிக்கிறது. குறிப்பாக மாலை நேரங்களில் குப்பைகளுக்கு தீ வைக்கும் ஒரு அவல நிலையும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் சீனிவாசனிடம் அப்பகுதி இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கு ஊராட்சி செயலாளர் நாங்கள் இப்பகுதியில்தான் குப்பைகளை கொட்ட முடியும் நீங்கள் வேண்டுமென்றால் மாற்று இடத்தை நீங்கள் ஏற்படுத்தி தாருங்கள் அங்கு குப்பைகளை கொட்டி விடுகிறோம் என்று அதிகாரத் தோரணையில் பேசுகிறார் என இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்...இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்...