மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை...
சென்னை: தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய ஒவ்வொரு இடஒதுக்கீட்டு பிரிவிலும் கடந்த காலங்களில் மிக அதிக சலுகைகளை அனுபவித்த சமுதாயங்களை நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற கருத்து விவாதத்திற்குரியது.
அதேநேரத்தில் இட ஒதுக்கீட்டில் அநீதி நிலவுகிறது. ஒரே இட ஒதுக்கீட்டு பிரிவில் உள்ள வளர்ச்சியடைந்த சமுதாயங்கள், அதேபிரிவில் உள்ள பின்தங்கிய சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைப்பதை தடுக்கின்றன என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து மிகவும் சரியானது. இந்த சிக்கலுக்கு சமூக நீதியின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஓபிசி சாதி என்ற புதிய பிரிவை மட்டும் சேர்த்தால் போதுமானது. ஆனால், இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இப்போது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இப்போதாவது, தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும்.
அதற்கு வசதியாக, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பையே, சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள் - கோவி.சரவணன்...