வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..
திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, திராவிட இயக்கத்தில் இணைந்து, முதல் அமைச்சர் பதவி வரைக்கும் வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் திராவிட இயக்கக் கோட்பாடுகளை அறிமுகப் படுத்தியதே கலைவாணர் தான்...
இதனை 'நான் ஏன் பிறந்தேன்?' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
வில்லுப்பாட்டின் மூலமும் தன் கொள்கைகளைப் பரப்பியவர் கலைவாணர். அவருடைய கிந்தனார் கதா காலட்சேபம் மிகப் புகழ் பெற்றது. அது எந்தச் சூழலில் உருவானது என்னும் சுவையான செய்தியை பேராசிரியர் அன்புக்கொடி நல்லதம்பி தன் நூலில் குறித்துள்ளார்.
அன்று கொடி கட்டிப் பறந்த நடிகை டி.ஆர்.ராஜகுமாரி தன் புது மனை புகு விழாவிற்கு நந்தனார் கதா காலட்சேபம் செய்யச் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரை அழைத்திருந்தார்.
அவரோ, ஒரு சூத்திரன் வீட்டில், அதுவும் ஒரு நடிகையின் வீட்டில் தான் பாட மாட்டேன் என்று நேரடியாகவே கூறிவிட்டார். நடிகை ராஜகுமாரி கவலையில் ஆழ்ந்து போனார்.
அப்போதுதான் கலைவாணர், 'இதுக்கு போய் எதுக்கும்மா கவலைப் படறே? நான் ஒரு கதா காலட்சேபம் நடத்தித் தர்றேன்' என்றார். அன்று அவர் அரங்கேற்றிய கதைப் பாட்டுதான் 'கிந்தனார்'.
*_தில்லைக்குப் போக வேண்டும் என்று அழுது தொழுத நந்தனாருக்குப் பதில், கல்விக்கூடத்திற்குப் போக வேண்டும் எனப் போராடிய கிந்தனார் நமக்குக் கிடைத்தார். யாரையும் தாக்காமல், யாரையும் புண்படுத்தாமல், நயமான ஒரு நாடகத்தை அன்று கலைவாணர் தந்தார். தமிழகம் முழுவதும் பிறகு அக் கதைப் பாட்டு சென்று சேர்ந்தது. ஒரு விதத்தில் அனந்தராம தீட்சிதருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...