வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....காற்றில் ஜானகியின் கீதம்  குரல்தேவதை எஸ்.ஜானகி பிறந்தநாள் இன்று...


வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....காற்றில் ஜானகியின் கீதம்  குரல்தேவதை எஸ்.ஜானகி பிறந்தநாள் இன்று...


*வாழ்க்கையில் சில விஷயங்களை வரம் என்றுதான் சொல்லமுடியும். அப்படி ஒவ்வொரு கலையை, வரமாக வாங்கி வந்தவர்கள் நிறையபேர் உண்டு*.


*குரலை வரமாக வாங்கி வந்தவர்தான் எஸ்.ஜானகி.*


படத்தில் உணர்வை வெளிப்படுத்துவதற்குத்தான் பாடல்கள். அந்த உணர்வை வெகு அழகாக நமக்குள் கடத்தி, நம்மைக் கனமாக்கியவரும் லேசாக்கியவரும் ஜானகி என்று கொண்டாடுகிறது திரையுலகமும் இசையுலகமும்.


இசைக்கு மொழியேது என்பார்கள்.


ஆந்திராவில் பிறந்தவர், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்.


ஆனால், இவர் பாடாத மொழிகளே இல்லை.


மூன்று வயதிலேயே இவர் பாட, இந்தக் குரலிலும் குழைவிலும் ஏதோ இருக்கிறது என இவரின் தாய்மாமா தான் கண்டறிந்தார்.


அவரின் வழிகாட்டுதலில்தான், சென்னைக்கு வந்தார். ஏவிஎம்மில் இணைந்தார்.


நம்மில் பலரும் சோகமான, துக்கமான, எதிர்பாராத திடுக்கிடும் விஷயங்களுக்குத்தான் ‘விதி விளையாடிருச்சு’ என்று சொல்லுவோம்.


ஆனால், விதியின் விளையாட்டு என்பது நல்லவைக்கும் பொருந்தும். வளர்ச்சியின் பொருட்டும் சொல்லலாம்.


ஆனால், சொல்வதில்லை. 1957-ம் ஆண்டு, பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் எஸ்.ஜானகி.


அவர் பாடிய அந்தப் படம்... *"விதியின் விளையாட்டு"*
ஆனால், ஜெமினியும் சாவித்ரியும் நடித்த ‘ *கொஞ்சும் சலங்கை* ’ படத்தில் *_"சிங்காரவேலனே’_*  பாடல்தான், ‘யாருப்பா பாடினது?’ என்று பட்டிதொட்டியெங்கும் கேள்வி கேட்டது. இவரின் பாட்டுக்கு தலையசைத்து மெய்ம்மறந்தது.


கதையின் உணர்வுகளை, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை, வார்த்தைகளின் வலிமையை, அர்த்தத்தின் மேன்மையை தன் குரல்வழியே மொத்தமாகக் கரைத்து, நமக்குள் கலக்கச் செய்யும் குரல், ஜானகிக்கே உரியது.


*_"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே..."_* என்ற பாட்டில் ஏக்கம் மொத்தத்தையும் குரல் வழியே சேர்த்திருப்பார்.


*‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’* எனும் ‘குங்குமம்’ படத்தின் பாடலில், பாடுவது ஜானகியா, நடித்துக் கொண்டிருக்கும் சாரதாவா என்று அப்போது விமர்சனம் எழுதினார்கள்.


ஆண் குரலில் ஒரு வசதி உண்டு. இந்தக் குரல் இந்த நடிகருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பார்கள்.


அந்தப் பாடகர் பாடினால், அந்த நடிகரே பாடியது போலிருக்கும் என்பார்கள்.


எஸ்.ஜானகியின் குரலில் நடிகைகள் தெரியமாட்டார்கள். மாறாக, அந்த நடிகைகள் தாங்கியிருக்கும் கேரக்டர் நமக்குள் விரியும்.


அப்படியொரு குரல் தன்மை ஜானகிக்கே உரியது.


ஜானகியின் குரலுக்குத் தக்கபடி, நடிகைகள் நடிப்பார்கள்.


*அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை* என்ற பாடலில், தேவிகா அவரே பாடுவது போல் நடித்திருப்பார். ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில், *'இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம்தென்றலைக் கேட்கின்றேன்’* என்ற பாடலில், அந்தத் தென்றலே இவரின் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் செல்லும்.


அப்படி மென்மை கூட்டியிருப்பார் எஸ்.ஜானகி. அதற்கு விஜயகுமாரியும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார்.


ஆனால் என்ன... ஜானகி பாடும்போது அவர் பாடுகிறாரா, பாட்டுக்கு வாயசைக்கிறாரா என்கிற சந்தேகமே வந்துவிடும். கை அசையாது. கால்கள் ஆடாது. உடம்பு வளையாது. தலை நிமிராது. கழுத்து திரும்பாது. கண்கள் அலையாது. உதடு அசைவது கூட தெரியாது.


ஆணி அடித்தது மாதிரி அப்படியே நின்று பாடுவதுதான் ஜானகியின் ஸ்டைல்.


ஆனால், கேட்கும் நம்மை ஆடவைத்துவிடுவார்.


கிழவிக்காகவும் பாடினார், குமரிக்காகவும் பாடினார், குழந்தைக்காகவும் பாடினார். எல்லாப் பாடல்களிலும் நம்மை ஈர்த்தார்.


‘குரு’ படத்தில், *எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்*’ என்ற பாடலில், போதையில் பாடுவது போலவே பாடியிருப்பார்.


*செந்தூரப்பூவே செந்தூரப்பூவே...* எனும் ‘16 வயதினிலே’ படத்தின் பாடலில், பருவ வயது ஏக்கத்தையும் ஆசையையும் வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்திலேயே நமக்குச் சொல்லியிருப்பார். *’காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி?’* என்கிற பாடலில் தீர்க்கமான அந்த ‘அவர்கள்’ அனு கதாபாத்திரத்தின் திடமும் உரமும் பாடலுக்குள் கொண்டு வந்திருப்பார்.


இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ யில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டுதான். ஆனாலும், தமிழகம் எங்கும் காற்றில் கலந்து, எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருந்த *மச்சானைப் பாத்தீங்களா?* பாடலை யாரால்தான் மறக்க முடியும்? கிராமத்துப் பாணியில், அந்தக் குரலின் ஏற்ற இறக்கங்கள். கிராமத்துப் பாதையைப் போலவும், நதியின் வளைவுகளைப் போலவும் நம்மைக் குதூகலப்படுத்திவிடும்.


‘பாத காணிக்கை’ படத்தின், *பூஜைக்கு வந்த மலரே வா* பாடலின் ஹம்மிங்கில் கலக்கியிருப்பார்.


எஸ்.ஜானகியின் இன்னொரு ஸ்பெஷலும் பெருமையும் என்ன தெரியுமா?
நடிகர் கமல் பாடியபோதெல்லாம், அவருக்கு இணைக்குரலாக எஸ்.ஜானகிதான் அதிகம் பாடியிருக்கிறார்.


அதேபோல், இளையராஜா பாடும்போதெல்லாம் அவருடன் இணைந்து பல பாடல்களைப் பாடிய பாடகி எஸ்.ஜானகியாகத்தான் இருக்கும்.


பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறார். இதுவரை, 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.


ஓ.எஸ்.அருண் மாதிரியான இசைப் பிரபலங்கள் கூட இவரின் *ஊருசனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு* என்ற பாடலை ஒன்ஸ்மோர் கேட்பார்கள்.


‘அந்தப் பாட்டு ஜானகியம்மா குரல்ல நம்மளை என்னவோ செய்யும்? மொத்த உலகத்தையும் தூக்கத்தையும் மறந்து கேட்டுக்கிட்டே இருக்கணும்னு நினைக்கவைக்கும்’ என்கிறார் ஓ.எஸ்.அருண்.


இத்தனை வருடங்களில் எத்தனையோ விருதுகள், பரிசுகள், கெளரவங்கள், பாராட்டுகள். *‘இஞ்சி இடுப்பழகா’* முதற்கொண்டு பல பாடல்களுக்கு தேசிய விருதுகள்.


‘பாடினது போதும்’ என்று ஒதுங்கி, அமைதியாய் இருந்தபடி வாழ்வை உற்றுக் கவனிக்கிறார் ஜானகி.


அவருடைய பாடல்கள், இன்னும் பல தலைமுறைகளுக்குமாகப் பயணித்துக்கொண்டே இருக்கும்.


*‘காற்றில் எந்தன் கீதம்’* பாடலுக்கு முன்னே உள்ள ஹம்மிங்கும், அந்தப் பாடலும் அப்படியொரு மென்சோகத்தை நமக்குத் தந்துவிடும்.


அதுதான் ஜானகி எனும் குரல் தேவதையின் மகத்துவம்!


*‘காற்றில் ஜானகியின் கீதம்...’* எப்போதும் இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.


*இன்று குரல் தேவதை ஜானகியம்மாவின் பிறந்தநாள் (23.4.) அவரை வாழ்த்துவோம்.*


*அவரின் குயில் குரலைப் போற்றுவோம்!*


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image