குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்க ஏற்பாடு- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் அறிவிப்பு...
: தமிழ்நாடு முதலமைச்சர் 13.04.2020 அன்று அறிக்கை வெளியிட்டதற்கிணங்க செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே 2020 மாத அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
மே 2020 மாத அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு, வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன்கள் 02.05.2020 (ம) 03.05.2020 ஆகிய இரு தினங்களில் வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும். மேலும் அட்டைதாரர்களுக்கு டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும் டோக்கனில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்பதையும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும்.
காவல்துறையின் மூலம் டோக்கனில் குறிப்படப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பதை அந்தந்த பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். அவ்வாறு அட்டவணை தயாரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் குடியிருப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மே 2020 மாத அத்தியாவசியப் பொருட்கள் 04.05.2020 தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவின்படி அனைத்து பொருட்களும் முழு அளவில் விலையின்றி விநியோகிக்கப்படும்டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது உரிய அளவின்படி பொருட்களை விநியோகம் செய்ய ஆகும் நேரத்தை குறைக்க ஏதுவாக முன்கூட்டியே அத்தியாவசியப் பொருட்களை (அரிசி, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு) ஒரு தொகுப்பாக தயார் நிலையில் வைத்து விநியோகம் செய்யப்படும்.
அனைத்து நகராட்சிகளில் இயங்கும் கடைகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் இதர பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரப்படியும் செயல்படும். பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களுக்கும் தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருட்கள் வழங்கப்படும். அதுபோன்றே மிகவும் வயதானவர்கள் நேரில் வந்து பொருட்களை நியாயவிலைக் கடைகளில் பெற்றுச்செல்ல இயலாதவர்களுக்கும் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள இடங்களுக்கு செல்லும்போது, கையுறை, முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவைகளை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் சென்று பொருட்கள் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் அத்தியாவசியப் பொருட்களை பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடன் உரிய பொருட்களை வழங்கப்படும்.
மேலும் பொது மக்கள் பாதுகாப்பான முறையில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு இவ்விலையில்லா அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்...