குடியாத்தம் அருகே ஒரு கீழடி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் பிரபு ஆய்வு....
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள சேங்குன்றம் என்ற சிற்றூரில் நாங்கள் மேற்கொண்ட மேற்பரப்புக் கள ஆய்வில் இவ்வூரின் மேற்கே உள்ள மலையடிவாரத்தில் தனியாரது விவசாய நிலத்தில் 15க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கல்வட்டத்தினைச் சில சமூக விரோதிகள் புதையல் கிடைக்கும் என்ற நோக்கில் தோண்டிப் பார்த்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தோண்டிய இடத்தின் உள்ளே ‘கல்பதுக்கை’ உள்ளது. இக்கல் பதுக்கையானது 6அடி ஆழத்தில் நான்கு புறமும் உறுதியான பலகைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் புறமாக உள்ள பலகைக் கல்லில் ‘U’ வடிவ இடுதுளை அமைப்பு காணப்படுகின்றது.
கல்பதுக்கையினைத் தோண்டியவர்கள் விட்டுச் சென்ற மண் குவியலில் ஈமப்பேழையின் உடைந்த கால்கள் இரண்டு கிடைத்துள்ளன. இவை மண்ணால் செய்து சுட்டெடுக்கப்பட்டவையாகும். இந்த கால்களானது அழகிய வேலைப்பாடுடன் வடிவமைப்பட்டுள்ளன. மேலும் சில கருப்பு சிவப்பு வண்ண மட்கலத்தின் ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இவை ஈமப்பேழையில் வைக்கப்பட்ட ஈமப்பொருட்களாகும். அவ்விடத்தில் மேலும் 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. கல்திட்டை (Dolmonoid Cist) கல்பதுக்கை (Slab Cist) கல்வட்டம் (Cairn Circle) ஆகிய மூன்று வடிவங்களும் இவ்வூரில் உள்ளன.
கல்திட்டைகளானது இவ்வூரில் உள்ள மலைப்பாதையில் 6கி.மீ நடைபயணத் தொலைவில் மலைமுகட்டில் உள்ளன. எட்டு ஏக்கர் பரப்பளவில் 15 கல்திட்டைகள் காணப்படுகின்றன. அவற்றில் 8 கல்திட்டைகள் நல்ல நிலையில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூன்று அடுக்கு கொண்ட சிறிய கற்களை நான்கு புறமும் அடுக்கி, அதன் மேல் 8அடி சதுரப்பரப்பும் 2 அடி விட்டமும் கொண்ட பலகைக் கல்லால் மூடப்பட்டுள்ளன. இந்தப் பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன் எடை இருக்கக்கூடும். இக்கற்களை இவ்வூர் மக்கள் ‘பாண்டவர் கல்’ என்றழைக்கின்றனர். இப்பெயரானது ‘மாண்டவர் கல்’ என்பதில் இருந்து வந்ததாகக் கருதலாம்.
இந்தக் கல்திட்டைகளுக்கு அருகாமையில் சிறியதும் பெரியதுமாக ஐந்து நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளன. நீர் சுவையுள்ளதாகவும் பருகுவதற்கு ஏற்ற நிலையிலும் இருக்கிறது. நீர்ச்சுனைக்கு அருகே பாறையில் 15 X 15 மீட்டர் சுற்றளவுள்ள கல்வட்டம் ஒன்றும் காணப்படுகின்றது. இந்த இடமானது பெருங்கற்கால மக்களது வாழ்விடமாகும். இந்த இடத்திலும் அகழாய்வு செய்யும் போது இன்னும் பல வரலாற்றுத் தகவல்களும் சான்றுகளும் கிடைக்ககூடும்.
என அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் மற்றும் தமிழ் பேராசிரியர் பிரபு தெரிவித்தார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்தி- கோவி.சரவணன்...