திருப்பத்தூர் அடுத்தசெல்லரப்பட்டி ஏரியில் செங்கல் சூலைக்கு மண் திருடும் மாஃபியா கும்பல்...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் கொரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லரப்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் களிமண் மற்றும் செம்மண் களை அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன்பேரில் திருப்பத்தூர் வட்டாட்சியர் விவசாய நிலங்களுக்கு மட்டுமே செம்மண் மற்றும் கல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசாணை வழங்கியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அப்பகுதியை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் ஏரியிலிருந்து நாள்தோறும் இரவு பகல் பாராமல் பத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு ஏரியில் உள்ள கனிம வளங்களை நூதன முறையில் கொள்ளையடித்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கனிமங்களை திருடும் நபர்களுக்கு துணை போகும் வகையில் வருவாய் துறை அதிகாரிகள் செம்மண் மற்றும் களிமண் திருட்டை தடுக்க முன்வரவில்லை. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்யமுடியாமல் ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அப்பகுதி விவசாயிகள். கடந்த 4 நாட்களாக திருடப்பட்ட கனிம வளங்கள் அருகிலுள்ள செங்கல் சூளைகளில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கனிம வளங்களை திருட்டுத்தனமாக திருடிய நபர்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் எடுப்பார்கள் என வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்....
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள் - கோவி.சரவணன்...