வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..
தமிழகத்தின் சிறந்த புலவர், தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் அவர்களின் நினைவு நாள் இன்று.
ராணிப்பேட்டை ( வடஆற்காடு) மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில், 1876-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி, ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார்.
நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது வயதில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார்.
உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர்.
*சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன் ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.*
அந்நாளில் வித்துவான் பட்டங்கள் வடமொழி கற்றவருக்கே வழங்கப்பட்டன. "தமிழ்க்கல்வி அரசாங்க சங்க'த்தின் தலைவரான நமச்சிவாயர், அத்தடையை அகற்றி, தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர்களுக்கும் "வித்துவான்' பட்டம் அளிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
அரசும் இவர் கருத்தை ஏற்றுக்கொண்டது. தமிழ் மட்டுமே படித்தவர்களும் வித்துவான் பட்டம் பெற வழிவகுத்த பெருமை கா.நமச்சிவாயரையே சாரும்.
சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்த நமச்சிவாயர், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
"நன்னூல் காண்டிகை' என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார்.
"தமிழ்க்கடல்' என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார்.
"நல்லாசிரியன்' என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். "ஜனவிநோதினி' என்ற மாத இதழில் சிறந்த கட்டுரைகளையும் எழுதிவந்தார் நமச்சிவாயர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் இவர் பெயரால் அமைந்த “நமச்சிவாயபுரம்” என்றும் குடியிருப்புப் பகுதியும் இவருடைய நினைவுக்கு பெருமை சேர்க்கிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...