பத்திரிகையாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை அவதூறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது சென்னையில் வழக்குப்பதிவு..
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்டம் என்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி.யும், அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ‘மத்திய பிரதேசத்தில் ஒரு ஹரிஜன் கூட உயர்நீதிமன்ற நீதிபதி கிடையாது. ஆனால், தமிழகத்தில் கலைஞர் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, 7 முதல் 8 ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகியுள்ளனர். இது திராவிடம் போட்ட பிச்சை, மற்றும் இந்த டிவி காரங்க இருக்கிறார்களே இவர்கள் மாதிரி ஒரு அயோக்கியர்கள் மற்றும் ரெட் லைட் ஏரியா மாதிரி தொழில் நடத்துகிறார்கள் எனக் கூறி இருந்தார்.
இவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. தனது பேச்சிற்கு ஆர்.எஸ். பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டிக்காததற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும் ஆதி திராவிட இன மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தி.மு.க. எம்.பி., ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் பேரவை தலைவர் கல்யாண சுந்தரம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு கீழ் ஆர்.எஸ்.பாரதியின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் பத்திரிகையாளர்கள் பற்றி கூறிய அவதூறு கருத்துக்கு திருப்பத்தூர் மாவட்டம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி. சரவணன்...