வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே...
படகோட்டி படத்தின் அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பரவி - பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த போது - என் அன்பிற்குரிய நண்பர் திரு.சின்னஅண்ணாமலை அவர்கள், ‘பனகல் பார்க்’ அருகே நடந்த ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் - ‘சில நேரங்களில், நொண்டிக் குதிரைகளும் கிண்டி ரேஸில் - Nose Finishing- ல் ஜெயிப்பதுண்டு. வாலி, அப்படித்தான்!’ என்று ஆரூடம் கூறி ‘அப்ளாஸ்’களை அள்ளினார்.
ஆனால் - ‘தென்றல் திரை’ நடத்திய என் நண்பர் திரு.கே.ஆர்.பாலன் அவர்களும், மற்றும் சில பத்திரிகைகளும்- திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்து நின்று, என்னைத் தாங்கிப் பிடித்தன!
காரணம் - வேலூர்க் கூட்டத்திற்குப் பின், திரு.கண்ணதாசன், திரு.சம்பத்தோடு - கழகத்தை விட்டு வெளியேறி தனியியக்கம் கண்டிருந்ததுதான்! இப்படி- எவர் எவருக்கோ நடந்த சண்டைகளில் - தேவையில்லாமல் என் தலை உருண்டது. யாரும் தாயக் கட்டையைக் கேட்டுக் கொண்டு உருட்டுவதில்லையே!
கண்ணதாசனுக்கு நேரே, கடை விரிப்பது என்பது - பத்மா சுப்பிரமணியத்துக்கு நேரே, பாண்டி ஆடுவது மாதிரி! காலம் - என்னை அத்தகு களத்தில் நிறுத்தியதே தவிர, நானாக என்னை இன்னொரு கண்ணதாசனாக நினைத்துக் கொண்டு, விம்மிய மார்போடும் வீங்கிய மண்டையோடும் அலைந்தவனல்ல. இருந்தாலும், இந்தக் குதிரை ஜெயிக்கும் என்று, என் மீது பணம் கட்டிவிட்டார் எம்.ஜி.ஆர்.! இரைக்க இரைக்க ஓடலானேன்.
அந்த ஓடலே ஒரு தேகப் பயிற்சியாகி, என் உடலுக்கு உரமும் உள்வலியும் சேர்த்தன.கல்யாணமான பிறகு ஒரு பெண் கலவியைக் கற்பது போல் - கவிஞனென்று ஆகிவிட்ட பிறகு நான் கற்கத் தொடங்கினேன். நிறையப் படித்தேன். நிறைய விஷயங்களைப் புதுக்கோணத்தில் சிந்தித்து - எனக்கென்று ஓர் Identity வேண்டுமென்று, வித்தியாசமாய்ப் பாட்டெழுத ஆரம்பித்தேன். அவை, வெகுவாக எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போக - பாட்டுகளும் ‘ராக்கெட்’ வேகத்தில் பிரபலமாக - இவையெல்லாம் இறைவன் திருவுள்ளம் என்று அமைதி காத்தேனே தவிர - தருக்கும், செருக்கும், இருக்கும் புகழைச் சுருக்கும், கருக்கும் என்று கிஞ்சித்தும் ஓராமல் உணராமல் - தடுப்புக்கட்டை இல்லாத தேர்போல் தறிகெட்டு ஓடியதில்லை!
இருப்பினும் - ஒரு வாரப் பத்திரிகையின் கேள்வி பதிலில் - கீழ்க்கண்டவாறு, வினாவும் விடையும் வெளியாகியிருந்தன. ‘கண்ணதாசன் இடத்தை வாலி பிடிப்பாரா?’ ‘கண்ணதாசன், யானை; வாலி, கொசு!’
சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில், எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்று போல் என்றும் வாழ்க!’ என்னும் படத்தின் நூறாவது நாள் விழா நடந்தது. நானும் - அந்தப் படத்தில் பாட்டு எழுதியிருந்ததால், விழாவில் கலந்து கொள்ளப் போயிருந்தேன். என்னைக் கொசுவோடு ஒப்பிட்டு எழுதியிருந்த பத்திரிகை ஆசிரியர் என் பக்கத்து ஸீட்டில் வந்து அமர்ந்தார். பரஸ்பரப் புன்னகைக்குப் பிறகு - அந்த ஆசிரியர் ‘என்னங்க வாலி! கண்ணதாசனை யானை என்றும், உங்களைக் கொசு என்றும் எழுதியிருந்தேனே - அதனாலே, என்மேலே உங்களுக்கு ஏதாவது வருத்தமா?’ என்று என்னைக் கேட்டார். அதற்கு நான் - ‘வருத்தமில்லே!.... ஆனா, ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்பறேன்; கொசு கடிச்சா, ஆனைக்கால
உடனே அவர் - தன் கறுப்புக் கண்ணாடியையும், தொப்பியையும் சரி செய்து கொண்டு -
பாசமோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு - ‘இந்த விநாடி முதல், உங்களைப் பற்றிய என் கருத்தை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன்!’ என்று மனமாரச் சொன்னார்.அவர்தான் அமரராகி விட்ட என் அன்பிற்கினிய நண்பர் திரு.தமிழ்வாணன்! ஆம்; ‘கல்கண்’டின் கண்களுக்குத்தான் நான், காஞ்சிரங் காயாய்த் தென்பட்டேன்!
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...