புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் அழைப்பு...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் ( டியூஜெ) புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மாநில அமைப்பு செயலாளர் பி .ஆர். சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மாநில தலைவர் பிஎஸ்டி, புருஷோத்தமன் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடு பாலிசியை 30 நபர்களுக்கு தலா 10 லடச்திற்கான விபத்து காப்பீடு மற்றும் சங்க உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசுகையில்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் நான்காம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர் என்பது பெருமைக்குரிய விஷயம். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரசு அதிகாரிகளுடன் இணைந்து திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர் பணியாற்ற முன்வர வேண்டும். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உள்ள கொரோனா வைரஸ காய்ச்சலை தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளுடன் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் பெரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா நபர் ஒருவருக்கு 10 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவதில் நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை உணர்ந்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என இதன் மூலம் உங்களை கேட்டுக்கொள்கிறேன். பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டு மனை பட்டா, அரசு சார்பில் வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பேசுகையில்..
இந்தியாவின் நான்காம் தூண் பத்திரிகை துறை. இந்த துறையில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் காவல்துறை மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பத்திரிக்கை துறை என்பது ஒரு பொறுப்பான துறையாகும். உங்களுக்கு சங்க அடையாள அட்டைகளை வழங்குவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எந்த நேரத்திலும் உங்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை முறையான பாதுகாப்பினை வழங்கும் என பேசினார்.
மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் பேசுகையில்.
இந்தியாவில் பணியாற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். அண்மைக் காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில் அவர்களுக்கு வழங்கி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும். குறிப்பாக மாவட்ட அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு சலுகைகள். தாலுக்காவில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இதர அரசு சலுகைகள் வழங்க வேண்டும். என பேசினார்.
இந்த பேரவை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் ரவி, மற்றும் மாநில நிர்வாகிகள், வேலூர் மாவட்ட தலைவர் இந்திரகுமார், மாவட்ட செயலாளர் கல்யாணம், உட்பட சங்க நிர்வாகிகள் பெரும் அளவில் கலந்து கொண்டனர். புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவராக ரமேஷ், செயலாளராக முருகேசன், பொருளாளராக முருகன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக கோவி.சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக நித்யானந்தன், மதன், வெங்கடேசன், சரவணன், சுஜிதா, போன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்ட தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி. சரவணன்...