திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் மரணம். உறவினர்கள் சாலை மறியல்...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் ரெயின்போ ஸ்கூல் என்ற தனியார் பள்ளி நடைபெற்று வருகிறது.
இப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதே பகுதியில் உள்ள
புளியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி பச்சையப்பன் மற்றும் மாதம்மாள் தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி (7) இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வழக்கம் போல வந்த பிரியதர்ஷினி தீடீரென மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மாணவி பிரியதர்ஷினியை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது அங்கு வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடல் மற்றும் முகத்தில் சிறு காயத்துடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துடன் கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின்ன முரணாக பதில் அளித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவி தீடீரென மயக்கமடைந்தாக கூறுகின்றனர். ஆனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் இந்த மாணவி
பள்ளியின் கட்டிட மாடியிலிருந்து கீழே விழுந்தாக கூறுகின்றனர். ஆனால் இதில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் திடீரென திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவி இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி காவல்துறையினரிடம் வாக்கு வித்தியாசத்தில் ஈடுபட்டனர். அதன்பின் காவல் துறை அதிகாரிகள் உங்கள் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி. சரவணன்...