நாமக்கல்லில் ரூ. 338 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக்கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
அவ்வகையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.338. 76 கோடி மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சி.விஜயபாஸ்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.
முன்னடாக, சேந்தமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் முன்பு 100-க்கு 34 பேர் தான் உயர்கல்வி படித்தனர். அரசின் முயற்சியால், இன்றைக்கு 100-க்கு 49 பேர் உயர்கல்வி படிக்கின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் கல்வி சிறக்கிறதோ அந்த மாநிலம் எல்லா வளங்களையும் பெறும் என்று பேசினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி. சரவணன்...