குமரி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டு உள்ளது. கொரோனா பீதியால் மக்கள் வீடுகளில் முடக்கம்... வெறிச்சோடி கிடக்கும் கன்னியாகுமரி கடற்கரை...
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
களியக்காவிளை, படந்தாலு மூடு, சூழால் ஆகிய சோதனைச்சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடும்போது கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1237 பள்ளிக்கூடங்கள் வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேசமயம் அரசு பொது தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மாவட்டத்தில் உள்ள 6 சினிமா தியேட்டர்கள் மற்றும் மால்கள் மூடப்பட்டு உள்ளது. பொழுது போக்கு பூங்காக்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பீதியால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு சென்று வருகிறார்கள். பாதுகாப்பு கருதி பலரும் முக கவசம் அணியத் தொடங்கி உள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது.
முக்கடல் சங்கம கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், காந்தி, காமராஜர் மண்டபங்கள், படகுத்துறை ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கன்னியாகுமரியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வர்த்தகம் முடங்கி உள்ளது. இதனால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
குமரி மாவட்டத்தை பொருத்தவரை சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியுடன் காணப்படும். ஆனால் தற்போது பொதுமக்கள் கொரோனா பீதி காரணமாக வெளியில் வருவது குறைந்து உள்ளதால் பல சாலைகள் குறைந்த அளவு போக்குவரத்தால் வாகன நெருக்கடி இன்றி காணப்படுகிறது. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடிய நிலையே உள்ளதால் இது என்ன குமரிக்கு வந்த சோதனை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையில் தெரிவிக்கின்றனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...