பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நீதிமன்றம் உத்தரவு.
வங்கிகளில் சுமார் ரூ. 9,000 கோடி மோசடியில் ஈடுபட்ட பெங்களூரூவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜன.,5-ம் தேதி பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார். மேலும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.அதேவேளையில், மல்லையா வழங்க வேண்டிய 11.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடியை பறிமுதல் செய்ய, அவரது சொத்துக்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் வங்கிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பான விசாரணையிலும், மல்லையாவின் சொத்துக்களை கையாள்வதில் ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறையும் அனுமதி கொடுத்தது.இந்நிலையில் விஜய்மல்லையாவின் சொத்துக்களை பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கின் இன்றைய விசாரணையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, இந்த உத்தரவிற்கு 18-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.