திருச்சி மற்றும் மதுரையில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார் படம் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி.
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை மதுரை மற்றும் திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பி லைகா நிறுவனத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.
ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் உள்ள சரண்யா என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த விஜய் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதேபோன்று திருச்சி உள்ளூர் கேபிள் டிவியிலும் தர்பார் திரைப்படத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சேனல்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. முன்னதாக தர்பார் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸிஸ் முழு படமும் வெளியானது. இந்த படத்தை மூன்று பாகங்களாக பிரித்து மொத்தமாக வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் அனுப்பி இருக்கிறார். அவர் தர்பார் படம் தியேட்டர்களில் கலெக்சன் ஆகவே கூடாது என்று கூறி அனைவருக்கும் பார்வேடு செய்துள்ளார். இதனால் வாட்ஸ் அப்பில் தர்பார் திரைப்படம் வைரலாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம் தர்பார் படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை சிலர் வேண்டுமென்றே கூறி திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.