ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் விழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வந்தாலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
மார்கழி மாதம் 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா விழாவை காண இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து முதல் திருநாள்
கடந்த 26ம் தேதி இரவு உற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியாக ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில், திருமங்கை ஆழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்பட்டது.
இருபது தினங்கள் நடக்கும் இந்த உற்சவம் பகல் பத்து, ராப்பத்து என இரு பகுதிகளாக பிரித்துக் கூறப்படுகிறது . 27 ம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை பகல் பத்தும், பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான ஜனவரி 5ஆம் தேதி உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.
காலை 4.08 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் ரத்தின அங்கி அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டார். தொடர்ந்து அதிகாலை 4 .45 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பெருமாள் வெளியில் வந்தார். இதனை தொடர்ந்து நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.