திமுக ஆட்சிக்கு வந்தால்
மதம், ஜாதி கலவரங்களை உருவாக்கும்
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, தலைமை கழக பேச்சாளர்கள் குரல்பித்தன், சின்னையா கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து தற்போது தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம் காலம்வரை தமிழுக்காக தமிழ் மொழிக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றது. தமிழுக்காக குரல் கொடுப்பவர்கள் அண்ணா திமுகவினர். திமுக தமிழை வித்து பிழைக்கின்றது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் தமிழை பற்றி பொதுமேடைகளில் பெருமையாக பேசுவார்கள். மொழிப்போர் தியாகிகள் போராட்டம் நடக்கும் காலத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் உள்ள திமுகதான் மொழிப்போர் தியாகிகளுக்கு போராடியது என்பது சரித்திரம். இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் நமது பகுதியை சேர்ந்த நாவுக்கரசர் காளிமுத்துதான். தமிழ் மொழி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. திமுகவில் தற்போதுள்ள தலைவர்களில் யாரும் மொழிப்போர் தியாகிகள் கிடையாது. அத்தனை பேரும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். ஏனென்று சொன்னால் தமிழைப் பற்றி பேசுபவர்களை அவர்கள் கூடவே வைத்திருக்க மாட்டார்கள். தமிழை விற்று பேசுபவர்களை அழைத்துக் கொள்வார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழ் என்று சொன்னாலே அவருக்கு பிடிக்காது. தமிழுக்காக ஒன்றும் செய்யமாட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உலகத் தமிழர் மாநாடு தஞ்சையில் நடத்தினார். திமுகவில் உலகத்தமிழர் மாநாடு நடத்த உலக தமிழ்ச் சங்கம் அனுமதி கொடுக்கவில்லை. உலக தமிழ் மாநாடு நடத்த அனுமதி கொடுக்காத காரணத்தினால் ஒரு சிலம்பாட்டக் கோஷ்டியை வைத்துக்கொண்டு கோவையில் செம்மொழி மாநாடு என்று கருணாநிதி நடத்தினார். தமிழர்களுக்கு உழைப்பது போல திமுகவினர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சமுதாயம்,, கிருஸ்தவ சமுதாயத்தை ஸ்டாலின் தூண்டிவிடுகின்றார். ஒவ்வொரு மதங்களையும் தூண்டிவிடுகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் இன்றைய பிஜேபி அரசு நிறைவேற்றி வருகின்றது. கெடுதலை உருவாக்கிய திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக, காங்கிரஸ் கட்சிதான். இன்றைக்கு ஒன்றுமே தெரியாத போன்று நாடகம் போடுகின்றார்கள். காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பட்டியலிட்டு பார்க்கவேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது திமுக காங்கிரஸ் கட்சிகள். ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுகதான். இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம்காங்கிரஸ், திமுகதான். ஒவ்வொரு பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போட்டது திமுக காங்கிரஸ் கட்சிகள்தான். இன்றைக்கு அவர்கள் ஆட்சியில் இல்லை. ஆளுகின்ற திறனை இழந்துவிட்டு நிற்கின்றனர். ஆகவே மொத்தமாக பழியை நம் மீது போட்டு விடுகின்றனர். இப்போது நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெறுகின்றது. இஸ்லாமியப் பெருமக்களுக்கு எந்த சூழ்நிலையிலும் ஒரு தீங்கு வரும் என்று சொன்னால் அதை தடுக்கின்ற முதல் ஆளாக அண்ணா திமுக தொண்டர்கள் இருப்பார்கள். அண்ணா திமுக கட்சி இருக்கும். நான் தற்போது பொதுக்கூட்டத்திற்கு வரும்போது இஸ்லாமிய சகோதரிகள் என்னை மிகவும் அன்போடு வரவேற்றார்கள். நான் அவர்களை சின்னம்மா என்றுதான் கூறுவேன். சிவகாசியில் அந்த அளவிற்கு உறவு முறையோடு நாங்கள் ஒற்றுமையோடு இருந்து வருகின்றோம்.. ஒற்றுமையோடு இருக்கும் எங்களை மத ரீதியாக பிரித்து தூண்டி விடுவதை திமுக செயல்பட்டு வருகின்றது. திமுகவின் பொய்யான முகம் ஒருநாள் வெளிப்பட்டே தீரும். ஒருநாள் உண்மை விழித்துக் கொள்ளும்போது திமுகவின் பொய்யான நாடகம் வெளிவரும். அப்போது திமுகவின் கொட்டம் ஒடுக்கப்படும். அந்த நேரத்தில் எல்லா சமுதாய மக்களும் ஒன்று திரண்டு திமுகவிற்கு மரண அடியை கொடுப்பார்கள். ஸ்டாலின் தப்பு கணக்கு போட்டு கொண்டு இருக்கின்றார். தேர்தலில் ஒன்றுமே செய்யாமல் ஓட்டு கேட்காமல் தொகுதி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒன்றும் செய்யாமல் வாக்குகளை அள்ளி விட்டார்கள். நாட்டில் மிகப் பெரிய அபாயம் நடந்து விட்டது போன்ற ஒரு பிரச்சினையே திமுக, காங்கிரஸ் கூட்டணி தூண்டிவிட்டது. இஸ்லாமியர்கள் எல்லாம் நாடுகடத்த போகின்றார்கள் என்று கிளம்பிவிட்டனர். கிறிஸ்தவர்களை எல்லாம் நாடு கடத்தப் போகிறார்கள் என்று கிளம்பி விட்டனர். நாட்டில் நடக்கும் தற்போதுள்ள பிரச்சனை குறித்தும் குடி உரிமை பிரச்சனை குறித்த இஸ்லாமிய சமுதாயத்தினரை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும். 1988 முன்பு பிறந்த இஸ்லாமியர்களுக்கு பிறப்பு சர்டிபிகேட்டை குடியுரிமை சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் உள்ளது. அதற்கு முன்பு யாரும் சர்டிபிகேட் என்பதை வைத்திருந்தது கிடையாது. அந்த பயத்தைப் போக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் இது நாட்டில் மிகப் பெரிய ஒரு கஷ்டத்தை உருவாகியுள்ளது. எங்களோடு தோளோடு தோள்நின்ற சகோதரர்கள் தற்போது தள்ளி நிற்கின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒரு பிரிவினை நடக்கின்ற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கவே மாட்டோம் எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தெளிவாகக் கூறியுள்ளனர். நான் இந்து என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை படுகின்றேன். அதற்காக என்னுடைய இஸ்லாமிய சகோதரரை வெறுக்க முடியுமா. கிருஸ்தவ சமுதாயத்தை வெறுக்க முடியுமா. நான் இந்துக் கோயில்களுக்கும் நன்கொடை கொடுத்துள்ளேன். தர்காவிற்கு நன்கொடை கொடுத்துள்ளேன். கிறிஸ்துவ ஆலயங்களுக்கு நன்கொடை கொடுத்துள்ளேன். எங்களுக்குள் பிரிவு என்பதே கிடையாது. இறைவனை கும்பிடுவதில் மதங்களை பார்க்கக்கூடாது. அனைவருக்கும் உதவ வேண்டும் என்றுதான் அனைத்து மதமும் வலியுறுத்தி வருகின்றது. இருப்பதை இல்லாதவர்ககுக்கு கொடுக்க வேண்டும் அதிலே நீ மகிழ்ச்சி கொள் என்று சொல்லி எல்லா மதங்களும் சொல்கின்றது. நபிகள் நாயகத்தின் கோட்பாடுதான் குர்ஆனில் சொல்லப்பட்ட வாசகம். எல்லா மதமும் வன்முறையை வெறுக்கின்றன. எந்த மதமும் கொலை செய்யவோ குற்றம் சொல்லவோ வலியுறுத்தவில்லை. தீங்கு செய்யவோ வலியுறுத்தவில்லை. நாங்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பாக பழகக் கூடியவர்கள். சிவகாசி சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் இருக்கின்றேன். இரும்பு கவசமாக இருந்து உங்களை நான் பாதுகாப்பேன். கோட்டைவாசல் காவலனாக நான் இந்த மாவட்டத்தில் இருக்கின்றேன். என்னை மீறி இங்கு ஒரு தீங்கும் ஒரு மதத்தினருக்கும் நடக்காது நடக்கவும் விடமாட்டேன். இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வாயிலாக நான் சொல்வது இஸ்லாமிய அமைப்புகள் கிறிஸ்துவ அமைப்புகள் அத்தனை பேரும் ஒன்றாக இருக்கின்றோம். ஆகவே இங்கு பிரிவினைக்கு இடமே கிடையாது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் அனைத்து சமுதாயமும் ஒன்றிணைந்து இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். மொழிக்காக எத்தனை தலைவர்கள் இரத்தம் சிந்தினார். அன்றைக்கு யாரும் மதம் பார்த்து போராடவில்லை. மதம், இனம் பார்த்து போராடவில்லை. சுபாஷ்சந்திரபோஸ்சிற்கு பல கோடி ரூபாய் சொத்துக்களை கொடுத்தது ஒரு இஸ்லாமிய சகோதரர். தனது சொத்துக்களை எல்லாம் கொடுத் அந்த இஸ்லாமிய சகோதரர் சமீபத்தில்தான் இறந்தார். கடந்த 50 ஆண்டு காலம்தான் நாட்டில் மதபிரச்சனை நடைபெற்று வருகின்றது. மதத்தை தூண்டிவிடுவது காங்கிரஸ், திமுக கட்சிகள் தான். மத பிரச்சினையை தூண்டி விட்டு அரசியல் செய்துவருகின்றனர். எதையெடுத்தாலும் மதத்தை தூண்டிவிடுவது, ஜாதியை தூண்டிவிடுவது இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து வருகின்றனர். கலவரங்களை தூண்டி விடும் திமுகவிற்கு தேர்தலில் நீங்கள் சம்பட்டி அடி கொடுக்க வேண்டும். திமுக போன்ற கட்சிகளின் கையில் ஆட்சி சென்றால் நாட்டில் பிரிவினையை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். எல்லா இடமும் சண்டை இழுத்து விடுவார்கள். வன்முறை கலாச்சாரம் பெருகி விடும். திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற மதக்கலவரங்கள், ஜாதி கலவரங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை . வாக்காளர்கள் என்றுமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பேசினார்..