தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்.
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் அடுத்த அடுத்தமாதம் (பிப்ரவரி ) 5-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர், இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், இந்திய அரசு தொல்லியல்துறை ஆகியவை இணைந்து இப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் இந்த பணிகள் தொய்வில்லாமல் சீரும் சிறப்புமாக செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்து சமய அறநிலையத் துறைக்கு பரிந்துரை செய்து துரை.திருஞானம் தலைமையில் 33 உறுப்பினர்கள் 22 புரவலர்கள் நியமித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் உபயதாரர்கள் மூலம் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கும்பாபிஷேக குழுத்தலைவர் துரைதிருஞானம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தஞ்சை மாநகரில் 200 கழிவறை வசதிகள் செய்யப்படுகின்றன.காவல், தீயணைப்பு,மருத்துவம், போக்குவரத்துக்கழகம்,மாநகராட்சி மற்றும் அரசு அலுவலங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையம், குடிநீர் வசதி, மின் விளக்குகள் வசதிகள் செய்யப்படுகின்றன. கோவிலுக்கு எதிரில் மினி காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி 32 கேமராக்கள் கோவிலுக்குள்ளேயும் 160 கேமராக்கள் தஞ்சை நகர் மாநகரிலும் அமைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து தஞ்சை மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு முக்கிய செய்திகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். தென்னக பண்பாட்டு மையத்தின் மூலமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேக விழா மற்றும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய 10 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகின்றன. யாகசாலை பந்தலுக்குள் மின்சார ஒயர்கள் தரைக்கடியில் புதைகுழி மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே இந்த கும்பாபிஷேகத்தை சீரும் சிறப்புமாக நடைபெற பொதுமக்கள் பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது குழு உறுப்பினர்கள் பண்டரிநாதன், அறிவுடைநம்பி,புண்ணியமூர்த்தி, ரமேஷ் ,சரவணன்,ரதிமீனா சேகர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..