ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு.
சென்னை-
2020-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் இன்று தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறி சட்டசபைக் கூட்டத் தொடரில் தன உரையை தொடங்கினார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசினார். இதனால், அவையில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது தமிழக ஆளுநர் தனது உரையைத் தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கலாம் என்றும், பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அவையைப் பயன்படுத்துங்கள் எனக் கூறினார். இதையடுத்து, ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதாவது :-
நிர்வாகத் திறனில் சிறந்து விளங்கியதற்கு தமிழகம் முதலிடம் பிடித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
குறிப்பாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு போலீசார் சிறப்பான பாதுகாப்பை அளித்திருந்தனர். மாமல்லபுரம் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு நிதி வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரூ. 560.30 கோடி மதிப்பில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாடு திட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவிரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். ஜி.எஸ்.டி. இழப்பீடாக தமிழக அரசுக்கு ரூ. 7,000 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது, எனக் கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. உங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்..