குடிபோதையில் விபத்து ஒருவர் படுகாயம் இன்ஸ்பெக்டருக்கு தர்மஅடி திருவண்ணாமலையில் பரபரப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விளை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ராதா (42). இவர் ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியிலிருந்து - ஆரணி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த சொகுசுகார் ஒன்று ராதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராதா பலத்தகாயம் அடைந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அங்கு திரண்டு ராதாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அத்துடன் காரை சிறைபிடித்து, அதை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததால் கோபமடைந்த மக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நில அபகரிப்புபிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரியும் சேதுபதி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆய்வாளர் சேதுபதியை மீட்டனர். மேலும், அவரை ஆரணி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுபோன்ற நபர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.