பரோல் காலம் முடிந்து மீண்டும் பேரறிவாளன் சிறை. தாய் கண்ணீர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் பேரறிவாளன்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்த குயில்தாசன், அற்புதம்மாள் ஆகியோரின் மகன் பேரறிவாளன். இவர் தற்போது வேலூர் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார்.
இவரது தந்தை உடல்நிலை பாதிப்பு, சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்குமாறு தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் பேரறிவாளனினுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கியது. இந்த நிலையில் ஒரு மாதம் பரோல் முடிவடையும் நிலையில் இருந்தபோது, பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு ஆஸ்துமா மற்றும் உடல் தொற்றுநோய் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து மேலும் ஒருமாதம் பரோல் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பரோலை இரண்டு மாதமாக தமிழக அரசு நீட்டித்தது. கடந்த இரண்டு மாதமாக அனுபவித்த வந்த பரோல் இன்றோடு முடிகிறது. எனவே இன்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு சென்னை புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அப்போது பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீர் விட்டு அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பேரறிவாளனுக்கு ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு மாதங்கள் பரோலில் வந்துள்ளார். கடந்த 27 ஆண்டுகளில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு இரண்டு முறை பரோல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பரோல் காலம் முடிந்து மீண்டும் பேரறிவாளன் சிறை. தாய் கண்ணீர்.