திருச்சி அருகே போலி மதுவை குடித்த இருவர் பலி - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கண்ணனூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (30), தாமோதரன் (55 ) சதீஷ் (30 ) மூன்றுபேரும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணனூர் பகுதியில் திருட்டுத்தனமாக அனுமதியின்றி விற்கப்படும் மது பாட்டில் ஒன்றை வாங்கி மூவரும் பங்கிட்டு மதுவை குடித்துள்ளனர். பின்னர் வாலிபர் சதீஷ் சொந்த வேலை காரணமாக துறையூருக்கு சென்றுள்ளார். மது குடித்த சற்று நேரத்திலேயே சரவணனும், தாமோதரனும் சுருண்டு கீழே விழுந்தனர் . இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார். உயிருக்கு போராடிய தாமோதரன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். துறையூருக்கு சென்ற சதீஷ் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சதீஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருட்டுத்தனமாக அனுமதியின்றி விற்கப்பட்ட போலி மதுவை குடித்ததால் இருவர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.