நடிகர் ரஜினிகாந்த் ஒரு அம்பு என்று சொன்ன பிரேமலதா விஜயகாந்திற்கு தான் அம்பு எய்தவர் யார் என்று தெரியும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பகுதியில் ரூ1கோடியே 68லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாலாட்டின்புதூரில் உள்ள கே.ஆர்.சாரதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 அரசு பள்ளிகளை சேர்ந்த 1603 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதன்பின் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்.
சசிகலா தொடர்பாக என்ன அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து சொன்னார் என்று அவருக்கு தான் தெரியும். அவர் மனதில் எது பிரதிபலித்ததோ அதை வைத்து கருந்து கூறி இருக்கலாம், நடிகர் சங்க தேர்தலில் யாரும் தலையிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அங்கு மொத்தம் 3,650 பேர் உறுப்பினராக உள்ளனர். நடிகர் சங்க தேர்தல் தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடந்ததை போல் பரபரப்பாக இருந்தது. தேவையில்லாமல் இதுபோல் பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம். அவர்களாக அமர்ந்து பேசி நல்ல தீர்வு கண்டு, நல்ல முறையில் நடத்தியிருக்கலாம் என்பது தான் எங்களுடைய கருத்து. அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டனர். அது என்னுடைய துறை என்றாலும் அதில் அரசு தலையிடாது. நீதிமன்றம் விசாரித்து, அந்த தேர்தல் செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது . மீண்டும் தேர்தல் என்ற நிலை உருவாகாமல் சமரசமாக பேசி நடிகர் சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். குறிப்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் என்பது அரசு அல்ல. அது ஒரு தனி அமைப்பு. அதில் தவறு நடந்தாலும் கூட பிற்காலத்தில் தவறு ஏதும் நடக்காமல் இருக்க என்ன வழிகாட்டுதல் செய்ய முடியுமோ அதனை நிச்சயம் தமிழக அரசு செய்யும். அதே போல், பல்கலைக்கழகங்களில் நடந்த பிரச்சினைகளில் தமிழக அரசு தலையிட்டு சுமுகமான தீர்வு காணப்பட்டது. அதே போல் டிஎன்பிஎஸ்சியிலும் அரசு சுமூகமான முறையில் கையாளும். வருகின்ற 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம். தற்போது நடிகர் ரஜினிகாந்த் பற்றி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு கருத்து சொல்லி இருந்தார். அது யார் என்று அவருக்கு தான் தெரியும் என கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...