சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் பாராட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிந்தகமானிபெண்டா என்ற மலைக்கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கிவருகிறது,அப்பள்ளியில் வாணியம்பாடி உதயேந்திரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.அவர் கடந்த 2015 ஆண்டு முதல் தன்னுடைய சொந்த பணத்தில் திறன் பலகை (INTER ACTIVE WHITE BOARD),உருவாக்கி மாணவர்களுக்கு தொழில் நுட்பத்துடன் பாடங்களை கற்பித்து வந்தார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த செயல் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலமாக பார்த்த அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது,மேலும் இந்த கற்பிக்கும் முறையை தமிழகத்தில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கடைபிடிக்கும் வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர் அருண்குமார் விளங்கினார்.இவருக்கு கனவு ஆசிரியர் விருது,புதுமை கண்டுபிடிப்பு ஆசிரியர் விருது போன்ற விருதுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.மேலும் அந்த மலைக்கிராம பள்ளிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதினை இந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறந்த பள்ளிக்கான விருது பெற காரணமாக இருந்த ஆசிரியர் அருண்குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் லோகேஷா ,தலைமையாசிரியர் லையரசி ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.மேலும் ஆசிரியர்கள் தரப்பில் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மலைப்பள்ளிக்கு வழங்கவேண்டிய சலுகைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். உடன் ஆசிரியர்கள் சங்கரன்,அனிதா ,நிகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.