கோவை: விஞ்ஞானி ஜி.டி நாயுடுவின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மற்றுமொரு ஜிடி நாயுடு நினைவு கலையகம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று துவங்கப்பட்டது.
கோவையில் கட்டட கலை மற்றும் நவீன தொழில்களின் முன்னோடியாக கருதப்படும் ஜிடி நாயுடு, அவரது வாழ்நாளில் பொறியியல் துறையில் ஈடு இணையற்ற சாதனைகளை நிகழ்த்தியவர். அவரது கண்டுபிடிப்புகள் பலவற்றையும் நாம் தற்போது பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் முதல் முறையாக மின்மோட்டரை உற்பத்தி செய்த பெருமை இவரையே சாரும். இதனால் இவர் 'இந்தியாவின் எடிசன்' என்றே அழைக்கப்படுகிறார்.கோவையின் வளத்துக்கு பாடுபட்ட இவரது கண்டுபிடிப்புகள், கோவையில் உள்ள தொழில்களுக்கு அவர் அளித்த பங்குகளை எடுத்துக் காட்டும் விதமாக பல்வேறு அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்த நிலையில், ஜி.டி நாயுடுவின் கண்டுபிடிப்புகள் அடங்கிய புதிய கலையகம் கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி மியூசியத்தில் இன்று திறக்கப்பட்டது.இதனை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். புதிய கலையகத்தின் திறப்பு விழாவின் கௌரவ விருந்தினராக இந்தியா டுடே குழுமத்தின் குழும ஆசிரியர் குழு இயக்குனர் (வெளியிடுதல்) ராஜ் செங்கப்பா பங்கேற்றார். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, ' ஜி.டி நாயுடு – இந்தியாவின் எடிசன்' என்ற அவரது வாழ்க்கை குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இதில் அவரது கூர்மையான அறிவும், அசாதாரண வாழ்க்கையும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஊக்குவிப்பும் இடம் பெற்றிருந்தது. இந்த கலையகத்தில், ஜி.டி நாயுட் தயாரித்த கால்குலேட்டர்கள், ரேடியோக்கள், மோட்டார் பம்ப் செட்டுகள் மற்றும் பல்வேறு விதமான எலெக்ட்ரானிக் பொருட்கள், மற்றும் ஜி.டி நாயுடு கடந்து வந்த பாதை குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் இணையத்தில்...