டிக் டாக் செயலி மூலம் காதல் திருப்பூர் அருகே பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை. டிக் டாக் செயலியை தடைசெய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார்..
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 16 வயது மகள் ஹேமலதாவுடன் பல்லடம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்டு பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதில் ஆறுமுகத்தின் மகள் ஹேமலதா இரண்டு மாத கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என்று கடந்த டிசம்பர் மாதம் ஹேமலதா வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் கடந்த 27ம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேல்முருகனை மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இருப்பினும் வேல்முருகன் பிணையில் வெளிவர முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சமூக சீரழிவிற்கு காரணமான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.