சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து 8 வயது சிறுமி கொடூரக்கொலை. போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், கட்டிட தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா (8). இவள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
வழக்கமாக பள்ளி முடிந்ததும் கீர்த்திகா தந்தை வேலை செய்யும் இடத்திற்கு செல்வார். ஆனால் நேற்று பள்ளி முடிந்த பின் வீட்டுக்கு வந்த சிறுமி, தந்தையை பார்க்கச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவள் அங்கு வரவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரம் மற்றும் உறவினர்கள் கீர்த்திகாவை பல இடங்களில் தேடினர். அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நேற்றிரவு சிவகாசி டவுன் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை சித்துராஜபுரம் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமி காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தது மாயமான கீர்த்திகா என தெரியவந்தது. மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்த சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.