பழைய 500ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கிய திமுக எம்எல்ஏ..
வேலூர் சலவன்பேட்டை, சூளைமேடு பகுதியை சார்ந்த புவனேஸ்வரி என்கிற வயது முதிர்ந்த மூதாட்டி அவர்கள், தனது உடல் உழைப்பால் ஈட்டிய கூலித்தொகையான பழைய 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.12,000 பணத்தை தலையணை உரையில் வைத்து உள்ளார். பல நாட்களாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்ததால் இப்பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றாமல் வைத்துள்ளார். தான் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு வாடகை பணம் செலுத்திட முற்பட்டபோது செல்லாத பணத்தை வீட்டின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாறாத பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் சம்மந்தமாக மனு அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பணத்தை மாற்ற இயலாது என கைவிரித்த செய்தியை நாளிதழ்கள் வாயிலாக பார்த்த வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி மூதாட்டியை வேலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு அழைத்து அவரின் கோரிக்கையை ஏற்று மூதாட்டியிடம் இருந்த செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக தற்பொழுது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல், உடல் உபாதைகளால் நலிவுற்ற அவருக்கு உரிய சிகிச்சை அளித்திட தனது தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார்.