நித்யானந்தா ஆசிரமம் வழக்கு முடித்து வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் முருகானந்தம் இவர் கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சீடராக சேர்ந்தார். அங்கு அவருக்கு ப்ராணாசுவாமி எனப் பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் சில சீடர்கள் தாக்கப்பட்டனர். இதை அறிந்த பல் மருத்துவர் முருகானந்தனின் தாய் அங்குலட்சுமி மகனை சந்திக்க தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும். தனது மகனை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால் அவரை மீட்கக் கோரியும் அங்குலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர். சுப்பையா மற்றும் ஆர். பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகானந்தம் என்கிற ப்ராணாசுவாமியை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது அங்குலட்சுமி வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் முருகானந்தனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முருகானந்தம் நான் எனது விருப்பத்தின் பேரிலேயே நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை மற்றும் நான் முழு சுதந்திரமாக ஆசிரமத்தில் தங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து முருகானந்தம் தாய் அங்குலட்சுமி தொடர்ந்த வழக்கை முடித்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு நித்யானந்தா மீது சுமத்தப்பட்ட ஒரு பொய் வழக்கு என்று பிடதி ஆசிரம நிர்வாகிகள் கூறுகின்றனர்.