நாகூர் தர்காவின் 463வது ஆண்டு கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகப்புகழ்பெற்ற இந்த தர்காவின் 463ம் ஆண்டு கந்தூரிப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக நாகப்பட்டினம் மீராப்பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் துவங்கியது. கண்ணாடி ரதம், டீஸ்டா கப்பல், செட்டிப்பல்லக்கு, பீங்கான் ரதம், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து ரதங்களில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே நாகூருக்கு கொடி ஊர்வலம் வந்தடைந்தது. தாரை தப்பட்டையுடன் நடைபெற்ற கொடி ஊர்வலம் வரும் வழியில் பொதுமக்கள் மலர்களை தூவி சாதி, சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர். நாகூர் அலங்கார வாசலில் கொடி ஊர்வலம் நிறைவடைந்தது. சிறப்பு தொழுகைக்கு பின்பு, தர்காவின் 5மனோராக்கள் ( கோபுரங்கள்) மீது ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வண்ணமிகு வாண வேடிக்கைகள் நடைபெற்றது. கொடியேற்றத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது.