முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது புகார்..
ஈரோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி அவரது காரில் ஈரோடுக்கு வந்துள்ளார். அப்போது கரூர் மாவட்ட சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் துப்பாக்கி காட்டி தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலபாரதி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் இருந்து கரூர் செல்லக்கூடிய மணவாசி சுங்கசாவடி உள்ளது. அங்கு எனது கார் வந்தவுடன், அனுமதி சீட்டினை காட்டிய போது, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். அதோடு எங்களது ஓட்டுநரிடம் அவர்கள் மரியாதைக்குறைவாக பேசினர். எனது டிரைவர் காரை எடுக்கமுடியாது என்று கூற, அப்போது, சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் வந்த ஒருவர் எனது கார் முன் நின்றார். அவர் ஏதோ எங்களை மிரட்டல் விடும் தொணியில் வேகமாக வந்தார். அந்த துப்பாக்கியுடன் வந்தவர் பணத்தை எடுத்து செல்லும் போது மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், சுங்க வரி செய்யும் இடத்திற்கு வருகிறார் என்றால் என்ன காரணம்.அவர் முறையாக அனுமதி பெற்றுள்ளனரா? என்று தெரியவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த சுங்கசாவடிகள் உள்ளனவா?, இச்சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஎம் கட்சி சார்பில் புகார் அளிப்போம் என்றார். முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.