சாலை விபத்தில்லா தமிழ்நாடு; துணிச்சலான நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..
சென்னை,
உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவிலேயே அதிக அளவில் விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடுதான். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் பெருநகரமும் சென்னைதான். இந்த புள்ளிவிவரம் வேதனையை அளிக்கிறது.
விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, உயிரிழப்புகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. சாலைகளில் நிகழும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன.
விபத்துகளில் காயமடையும் நான்கரை லட்சம் பேரில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரத்தை ஈட்டும் திறனை இழக்கின்றனர். சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் இனிவரும் காலங்களில் இத்தகைய இழப்பைக் கட்டுப்படுத்த முடியும்.
விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான். முக்கியமாக ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையைக் கடுமையாக்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் எளிதாக கார் ஓட்டுநர் உரிமம் கிடைக்கிறது. இதுதான் விபத்துக்கான முக்கியக் காரணமாகும். எனவே, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையானதாக மாற்றியமைக்க வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நான் கூறும் அறிவுரை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்பதுதான். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்...