கோவை சுந்திராபுரம், குறிச்சி கல்லுக்குழி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (42) பெங்களூரில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுக்கு முன் பணியில் இருந்து விலகி கோவை வந்துள்ளார். இவரது மனைவி அழகு. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாத சக்திவேல், திருநெல்வேலியை சேர்ந்த அக்கா வீட்டாருடன் மட்டும் செல்லிடப்பேசியில் பேசி வந்தார். இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக எந்த தொடர்பும் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது அக்கா தினேஷ், கோவை வந்து சக்திவேலின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. பின்னர் சென்று பார்த்த போது சக்திவேல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ் குனியமுத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். பின் அங்கு வந்த போலீஸார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது : உயிரிழந்த சக்திவேல் மண்ணெண்ணைய் மற்றும் தேங்காய் சிறட்டைகள், காகிதத்தை கொண்டு எரித்து கொல்லப்பட்டுள்ளார். அவர் இறந்து சுமார் 4 மாதம் ஆகி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கு கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..