மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கிராமம் கிராமமாக சென்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு விராதனூர், சாமநத்தம், வலையங்குளம், வளையப்பட்டி, ஒத்தை ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர்.
ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது அதிமுக தேர்தலை எதிர் கொள்ள மாட்டார்கள் இது மோடியின் பினாமி ஆட்சி என கூறினார். தற்போது இலங்கைத் தமிழருக்காக போராட்டம் நடத்துகிறேன் என்ற போர்வையில் பச்சோந்தி தனமாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவினர் தேர்தல் களத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனைப் பயன்படுத்தி தமிழக மக்கள் மத்தியில் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார். தற்பொழுது திமுக என்ற கோட்டை சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் கலைஞர் இருக்கும் வரை திமுக அனைத்து தேர்தலிலும் தோல்வி என்று தெரிந்தும் கம்பீரமாக போட்டியிடுவார்கள். ஆனால் ஸ்டாலின் தலைமை ஏற்ற பிறகு எப்படி இருந்த திமுக இன்று இப்படி ஆகிவிட்டது. குறிப்பாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட கதையாய் உள்ளது தற்போது திமுக வேட்பாளர்களின் நிலை. சரியான தலைமை இல்லாமல் திமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தின் தூண்களாக செயல்படுவது ஆளும் கட்சியான அதிமுகவுடன் சேரும்போது பல திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் பொதுமக்களுக்கு கிடைக்கும். தற்போது திமுகவினர் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதனை பயன்படுத்தி கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி செய்யும் வகையில் களப் பணி ஆற்றிட வேண்டும்.அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடரும் என பேசினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.