வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கம்மவான்பேட்டை பகுதியில் உள்ள மொட்டை மலையில் முருகர் கோயில் அடிவாரத்தில் கடந்த வாரம் ஒரு பெண் குழந்தையின் சடலமாக இருப்பதாக வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாழனூர் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் குழந்தை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து மஞ்சுளா விடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அப்போது காவல்துறையினரிடம் கூறிய மஞ்சுளா
எனக்கு 23 வயதாகிறது. வேலூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்துவந்தேன். என் பெற்றோர் என்னுடைய விருப்பமில்லாமல் என்னை விட வயதில் இருமடங்கு உள்ள தாய்மாமன் பஞ்சாட்சரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துவைத்தனர். அப்போது என்னுடன் பணிபுரிந்த தோழிகள் மற்றும் ஊரில் உள்ள தோழிகள் எனக்கும் தாய்மாமனுடயை வயது வித்தியாசத்தை கூறி அடிக்கடி கேலி கிண்டல் செய்தனர். அப்போது முதல் கணவனுடன் வாழப் பிடிக்காமல் தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன்பிறகு எனது அக்காவின் உறவுக்காரர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. இரண்டு பேரும் போனில் அடிக்கடி பேசிக்கொண்டோம். நெருக்கம் அதிகமானதால் பாண்டியனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டேன். அதன்பின் 6 மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வேலூரை அடுத்த வரகூர் புதூர் நொறுக்குப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவருடன் வேலைக்கு செல்லும் போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதல் திருமணம் ஆவதற்கு முன்னரே ராஜாமணிக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. தற்போது ராஜாமணி என்னையே நினைத்துக்கொண்டு வாழ்வதாக என்னிடம் கூறினார். நீ உனது இரண்டாவது கணவரையும் விட்டுவிட்டு வா நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று போனில் கூறினார். அவருடன் வாழ ஆசைபட்டு கடந்த 23-ம் தேதி இரண்டாவது கணவரிடமிருந்து பிரிந்து குழந்தையுடன் பேருந்து மூலம் வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்தேன். அப்போது பழைய காதலன் ராஜாமணி இரு சக்கர வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டு கம்மவான்பேட்டை மொட்டை மலையில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்துகொள்வதற்காக அழைத்துச் சென்றார். அப்போது ராஜாமணி தாலியையும் தயாராகக் கொண்டுவந்திருந்தார். அப்போது குழந்தை நமக்கு இடையூறாக இருக்கிறது.இது நமக்கு வேண்டாம் வேறு குழந்தையைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்றார். நானும் புது வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையைக் கொலை செய்துவிட சம்மதித்தேன். என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்ட ராஜாமணி குழந்தையைக் கொன்றார்.
பின்னர், மலை அடிவாரத்தில் குழந்தையின் உடலைத் தூக்கி வீசினார். அதன்பிறகு, நாங்கள் திருமணம் செய்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டோம் என கூறினார். காதல் மற்றும் கள்ளக்காதல் பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டது இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..