திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து பணிமனை அருகில் உள்ள டி.எம்.சி. பகுதியில் தீர்த்தவாரி குளம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் கழிவுநீர் தேங்கும் இடமாக இருந்தது. இக் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து, நகராட்சி சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் குளத்தை தூர்வாரி சீரமைக்க ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தீர்த்தவாரி குளம் சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. இப்பணியை அடிக்கடி மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்து பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, "தீர்த்தவாரி குளம் நகரின் பழமை வாய்ந்த குளமாக உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் குளம் பாழடைந்து காணப்பட்டது. இதையடுத்து, குளத்தை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.இப்பணிகள் முடிந்தவுடன் குளத்தை சுற்றிலும் நடைமேடை அமைக்கப்படும். குளத்தை தூய்மையுடன் பராமரிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பொதுமக்களும் கழிவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குளத்தில் வீசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
திருப்பத்தூர் தீர்த்தவாரி குளத்தில் தூர்வாரும் பணி ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு.