வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் கடந்த வாரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஒன்றரை டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் குட்கா பாக்கெட்டுகள் பெங்களூரில் இருந்து வேலூருக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தெரிந்தது. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து தனித்தனியாக 2 வேனில் வந்தவர்கள் இடையே நேற்று காலை பர்கூரில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது பள்ளிகொண்டா டோல்பிளாசா வரை தொடர்ந்தது. அங்கு தகராறு முற்றிய நிைலயில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் இருதரப்பையும் வேன்களுடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்ததும், அதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் குட்காவை கடத்தி வந்து வேலூர் அப்துல்லாபுரம் அருகில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து சிறிய கடைகள் மூலம் விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. இந்நிலையில் வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியம் மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் பிடிபட்டவர்களுடன் அப்துல்லாபுரம்-தெள்ளூர் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் குட்கா பாக்கெட்டுகளும் இருந்தது. இதையடுத்து வேன்களில் இருந்த குட்கா பாக்கெட்டு பெட்டிகள், குடோன்களில் இருந்தவை என 2 டன் குட்கா மற்றும் வேன்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட குட்கா மதிப்பு 20 லட்சம் ஆகும்.இதையடுத்து குடோன் உரிமையாளருமான அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அப்துல்லாபுரம் சக்திவேல் மற்றும் வேனில் வந்த பெரிய சித்தேரி பிரசாந்த்(23), ஊனை வாணியம்பாடி வினோத்குமார்(30), கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பூவரசன்(22), தர்மபுரி மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த அர்ஜூனன்(37) ஆகியோரை கைது செய்தனர். அப்போது சக்திேவல், 'இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னை கைது செய்யக்கூடாது' என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தனது சட்டையை தானே கிழித்துக் கொண்டார். மேலும் போலீஸ் வேனில் ஏறவும் முரண்டு பிடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். குட்காவை கடத்தி வந்து குடோனில் பதுக்கி விற்கும் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ஜீவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரில் இருந்து வேலூருக்கு கடத்தி வந்த 20 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா பறிமுதல்.அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது.