தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, உள்ளிட்ட பத்து மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நடத்தப்படும் தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை முடிவை அறிவிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் இரண்டாம் தேதி ஊரகப் பகுதிகளுக்கு இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டு, தடை கோரும் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
உள்ளாட்சித் தேர்தலின் முடிவை ஜனவரி 2ஆம் தேதி வெளியிட தடையில்லை.சென்னை உயர்நீதிமன்றம்.
• தமிழ் சுடர் காலை நாளிதழ்