கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் இன்று புளியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு கடைகளில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்கா பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
கடை உரிமையாளர்கள் ஆறுமுகம் (45), சுயம்பு துறை ( 37 ) ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகளை நடத்துவோம். கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் குடோன் என்று யாரேனும் வாடகைக்கு கேட்டால் முழுமையாக விசாரித்து வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறாக வீட்டை தவறாக பயன்படுத்தினால் வீட்டுக்கு சீல் வைக்கப்படும். மேலும் வழக்கு முடியும் வரை அந்த வீட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே வீட்டு உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் காமராஜ், மகாராஜன் மற்றும் ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் உதவி ஆய்வாளர்கள் ஜெசிஸ் உதயராஜ், முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.